Sunday, April 11, 2010

ஹிட்லர் - பாகம் 2 - நாடோடியும் திறமையால் அதிபராகலாம் ..

     (கடந்த பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.. எனவே தாமதமில்லாமல் அதன் தொடர்ச்சியை தருகிறேன்... முடிந்தவரை தமிழில் தரவே முயல்கிறேன். ஆனாலும் சில இடங்களில் தமிழிஷ் எட்டிப் பார்க்கலாம். தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும். திருத்தல்களை தெரிவிக்கலாம். புதியவர்கள் முந்தைய இரு பதிவுகளை படித்தால் தெளிவாக உணரலாம்.)   
      அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார்.. அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.. முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி.. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.. ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான்.. அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது. ( நம் அனைவருக்கும் நமது உறுதியையும் திறமையையும் உணர்ந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது. ஹிட்லரின் உறுதியை அவரே உணர்ந்து கொண்ட தருணம் இதுவாக இருக்கலாம் ).

          ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். " கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன் ! " என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.

        மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான்.. அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. ( இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது ). மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது. 1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.
    
           அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.

( புகைப்படத்தில்  கூட்டத்தில் ஒருவராக ஹிட்லர்)
                1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ( முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. இத்துணைக்கும் அவர் திரைப்பட நடிகரோ, அரசியல் குடும்ப வாரிசோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.) சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான். சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.

அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


     ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி.ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது. அந்த சமயம் பார்லிமெண்டில் தீப்பற்றி கொள்ள கம்யூனிஸ்ட்களே இதற்க்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார். 1934 -ல் ஹிண்டன்பெர்க் இறந்துவிட, ஜனாதிபதி பதவியை கைப்பற்றினார் ஹிட்லர்.


     ஜனநாயகம் முறையில் ஆட்சியை பிடித்த ஹிட்லர், தனது திறமையால் ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்தி, ஜெர்மனியர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டதும், பிறகு கொலைகள் செய்யும் சர்வாதிகாரியாக மாறியதும், அதனால் வீழ்ச்சியடைந்ததும் வரும் பதிவுகளில்...

( புதிதாக பதிவுகளை எழுத தொடங்கிய எனக்கு உங்களின் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி.. நான் உங்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன். )

3 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

wow amazing.!

Anonymous said...

good posting, im on it .... keep up the good work

Yazhini said...

superb work

Post a Comment