Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன - எனது பார்வையில்

தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் என்று யூகிகமுடியாத படைப்பாளியாக திகழ்கிறார் செல்வா.


நாகரிகம் என்ற பெயரில் கட்டுப்பாடு இல்லாத இளமை சமுதாயமாக, பொறுப்பில்லாத, லட்சியம் இல்லாதவர்களாக உருவகப்படுத்தபட்டிருக்கிறோம் நாம். படத்தின் ஆரம்பக்க்காட்சிகளில் இளைஞர்களின் நாகரிக வாழ்கையே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த உறவில், நட்பில் உள்ள சாதகம், பாதகம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது துணிவான ஒன்று. 'டேடிங்' என்ற, இழிவாக கருதப்படும் ஒருமுறையில் அறிமுகப்படுத்தப்படுகிறாள் நாயகி. நண்பனின் காதலியாக அறிமுகப்படுத்த படுகிறாள் நாயகனுக்கு. யாருக்கு வரும் இந்த துணிச்சல். வரைமுறை இல்லாதவர்களாக காட்டப்பட்டு இருந்தாலும் வரைமுறை மீறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது முதல்பாதி. இன்றைய தலைமுறைக்கு லட்சியவேட்கை எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு தனுஷின் கதாப்பாத்திரம் சிறந்த எடுத்துக்காட்டு.

தான் குருவாக என்னும் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்டு அவமானப் படுத்தப்படும் போதும் ,தன் உழைப்பை அவர் சுரண்டியதை எண்ணி மனம் கொதித்து இயலாமையால் கூனிக் குருகுவதும் மிக சிறந்த ஒரு நடிகனை நம் கண்முன்னே நிறுத்துகிறது. முதல்பாதி தனுஷின் நடிப்புக்காக ஒதுக்க பட்டிருக்கிறது. மிகப் பிரமாதமாக பயன் படுத்தி இருக்கிறார். கனவுத்தந்தையாக வருபவரும், ஏமாறுகிறோம் எனத் தெரியாமலே ஏமாறும் நண்பனும் மனதில் நிற்கிறார்கள். ஆங்காங்கே செல்வாவின் நகைச்சுவையும் தெளிக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின் பலம் இரண்டாம் பாதிதான். இரண்டாம் பாதியில் முழு ஆதிக்கம் செய்வது கதாநாயகியே. படத்தின் முடிவில் தனுஷ் சொல்வதைப் போல, இரும்பு மனுஷியாகவே உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். உணர்ச்சியின்மை, கோபம், ஆற்றாமை, இயலாமை, கர்வம் எத்தனை பாவங்களை முகத்தில் காட்டுகிறார். அதுவும் மெல்லிய முக அசைவுகளில்.. பாராட்டப் படவேண்டியவர். முதல் பாதியில் இவரின் கதாப்பாத்திரத்தை பார்த்து முகம் சுளிக்கும் பழைய பஞ்சாங்கங்கள் கூட இரண்டாம் பாதியில் இவரை போன்ற மனைவி நமக்கு வேண்டுமென்றோ, இவளை போன்ற மனைவியாக இருக்க வேண்டுமென்றோ நிச்சயம் ஆசைபடுவார்கள்.

நேரம் வந்தால் தான் நம் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிக்கும் என்று உணர்த்துகிறது கடைசி காட்சிகள். நண்பர்களிடையே உள்ள நட்பும் நன்றாக சித்த்தரிக்கப்பட்டிருகிறது. கலகலப்பாக கொண்டு சென்று சோகமாக முடிப்பதைவிட, விரக்தியாக கொண்டு சென்று சுபமாக முடித்திருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்று. இசை, படப்பதிவு அனைத்தும் உலக தரம்மிக்கவை.

'மயக்கம் என்ன', மயக்கத்தில் இருப்பவர்களாக சொல்லப்படும் புதியதலைமுறை இளைஞர்கள், தம்பதிகள் அனைவர்களும் தெளிவாகவே உள்ளனர் என்பதை உலகிற்கு எடுத்து சொல்லும் ஒரு சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment