Saturday, June 12, 2010

செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்   ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.ரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்..
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, வாக்களித்து உதவுங்கள்...

Saturday, May 01, 2010

ஹிட்லர் - பாகம் 3 - மாபெரும் சாதனையாளர்..

            
ஒரு மனிதன் செய்த தவறுகளையே முன்னிலைப் படுத்தி அவனின் சாதனைகளை மறந்திடுவது நமது இயல்பு... இது அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் செய்யும் தவறுதான்.. ஹிட்லர் பெரிய தவறுகளை செய்திருந்த போதிலும் அவர் மிகப் பெரிய சாதனைகளுக்கும் சொந்தக்காரர். அவை முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டது..

                 சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும்.. ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா... "விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!", என்று எச்சரித்தார் ஹிட்லர்.
         
        வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும்..அதே போன்று,ஹிட்லரின் தவறுகளால்,அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது,அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

         1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்'என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட்,"ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை 'ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.

        முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933 -இல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 -இல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது.. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார். ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை.. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். ( திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.)

       ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn ) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்..

        முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.

        "சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும்.ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.

      'தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது' அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.

     ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார். 

          சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான். (அதனால்தான் என்னவோ சர்வதிகாரிகளின் ஆட்சிக்கு ஆதரவு தருவோர்களும் பலர் உண்டு.)

       ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது. 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.

         ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.

         இப்படி பல சாதனைகள் மூலம், அநேகமாகக் கடவுளுக்கு இணையாக ஜெர்மன் மக்களால் போற்றப் படும் நிலையை ஹிட்லர் நெருங்கிய சமயத்தில், அவர் அடியோடு கொலைகாரச் சர்வாதிகாரியாக மாறி, வெறியாட்டம் போட்டு, பிறகு ஒரேயடியாக வீழ்ச்சியின் விளிம்புக்கு போனது உலக வரலாற்றுச் சோகம். அவரின் பிற்பாதி கொடூர சர்வாதிகார ஆட்சியை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

(பின் குறிப்பு : ஹிட்லரின் மிகப் பெரிய தவறுகள் பலருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலானோர் அறிந்திருக்கின்ற காரணத்தால் சுருக்கமாக சொல்லி அடுத்த பதிவுடன் முடிக்க நினைக்கின்றேன். ஆனால் சிறிது விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினால் எனக்கு தெரியப் படுத்துங்கள்..விவரிக்கிறேன்.. உங்கள் ஓட்டுக்கள் பலரை இந்த பதிவு சென்றடைய உதவி புரியும்.. நன்றி..)




    

Monday, April 26, 2010

ஐ.பி.எல் -"சென்னை அணி தோற்றிருக்கலாமே",சென்னைவாசியின் ஆதங்கம்.



        ஒன்றரை மாதங்களாக நடந்து கொண்டிருந்த 20-20 போட்டிகள் ஒரு 
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே 
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த மும்பை அணி இறுதியிலும் 
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின் 
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம் 
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம் 
கற்பனை செய்து வைத்திருந்தேன்..

அனைவருமே போட்டியை பார்த்திருப்பீர்கள். எனவே எப்படி சென்னை வென்றது, எப்படி மும்பை தோற்றது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தால் வலது மேற்புறத்தில் இருக்கும் 'X' பொத்தானை அமுக்கிவிடுவீர்கள் என்று நானறிவேன்...

ஆனால் ஏன் சென்னை தோற்று இருக்க வேண்டும் என்று ஒரு சென்னைவாசியான நான் நினைக்க வேண்டும் என்று நீங்கள் கேக்கலாம்.. சென்னை அணி ஒன்றும் சென்னை வீரர்களின் திறமையை கொண்டோ, தமிழக வீரர்களின் திறமையை கொண்டோ, கோப்பையை வென்றிருக்கவில்லை. தோனி, பௌலிங்கர் போன்றோரையே சார்ந்திருந்தது.. தமிழக தொழிலதிபர் வாங்கியதாலேயே,சென்னையின் அணி ஆகிவிடாது.. எனவே சென்னை அணியின் மீது எனக்கு பெரிதாக ஒட்டுதலே இல்லை.. அதுவும் சென்னை அணி எதிர்த்தது சச்சினை... சச்சின் என்றுமே இந்தியர்களின் பிரதிநிதி.. சென்னை அணியா, இந்திய சாதனை மன்னனா என்று வந்ததால், ஒரு இந்தியனாக சச்சினுக்கே எனது ஆதரவு கிட்டியது... சென்னை அணியின் சரிவை கொண்டாடினேன்.. ( ஆனால் கடைசியில் எனது தம்பியிடமும், தந்தையிடமும் மூக்கு உடைபட்டது வேறு விஷயம்.. பரவாயில்லை.. சச்சினுக்க்காகத்தானே... )

சச்சின் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால் இந்த கோப்பை அவருக்கு மிகப்பெரிய பெருமிதத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனென்றால் அவர் இந்த தடவை,தனது கிரிக்கெட் வாழ்வின் ஒரேயொரு கரும்புள்ளியான 'கேப்டன்'பதவிக்கு லாயக்கில்லாதவர் என்ற கரையை துடைத்து எறியும் வாய்ப்பு பெற்றிருந்தார்..அதுவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியிடம் வெற்றிக் கோப்பையை பறித்து தன்னை சிறந்த அணித்தலைவராகவும் பதிவு செய்திருப்பார்...


தோனிக்கு வாய்த்ததை போன்றதொரு சிறந்த அணி சச்சின் கேப்டன் ஆக இருந்த போது அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் கங்குலி போன்றதொரு சிறந்த கேப்டன் உருவாக்கி கொடுத்த அணியை கொண்டு, டோனி பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகள், சச்சினுக்கு நிச்சயமாக அணித்தலைவராக தான் சோபிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்திய அணியின் வெற்றிகள் சச்சினுக்கு வருத்தம் தருகிறது என்று சொல்லவில்லை... அணித்தலைவராக தோனியின் வெற்றிகள் நிச்சயமாக சச்சினுக்கு வருத்தத்தை தந்திருக்கும்..

ஐ.பி.எல். கோப்பை அந்த வருத்தத்தை நீக்கியிருக்கும்... தோனிக்கு ஐ.பி.எல். லில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் அவர்..ஆனால் சச்சினுக்கு வெற்றி கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் தனது நீண்ட நாள் மனப் புழுக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்.. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தரும் சச்சின் சந்தோஷப்படவும், பெருமிதப்படவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது..

கோப்பையை வெல்ல தகுதியான அணியும் சச்சினின் அணிதான்.. தோனியின் அதிர்ஷ்டகரமான வெற்றியினை இன்னொருமுறை காண்பதற்காக தான், தனது அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றோமா என்று கூட சச்சின் நினைத்திருக்கலாம்.. சச்சின் ஒன்றும் பொறாமை குணம் கொண்டவர் இல்லை.. ஆனால் வெற்றிகளின் மேல் ஆசை இல்லாதவர் இல்லை..  அவ்வாறு ஆசை இல்லாதவராக இருந்தால் இத்தனை சாதனைகளை அவர் புரிந்திருக்கவே முடியாது.. இன்னொரு முறை ஒரு அணித்தலைவராக தனது மிகப் பெரிய வெற்றியை சச்சின் பெறுவதுற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான்.. ஆனால் சந்தேகமே இல்லாத பிரபலமான வாசகம்....
"கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் ஒரேக் கடவுள்"