Saturday, December 25, 2010

ஹிட்லர் பாகம் - 4 -சுட்டுத் தள்ளுங்கள் நாய்களை..

ஹிட்லர் பற்றிய முந்தைய பதிவுகளில் படித்தவர்க்கு ஹிட்லரின் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு புரிந்திருக்கும.



ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா.. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை..


அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்து மிருகங்களாக, கொலைக் கருவியாக மாறி மும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்' பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா.. ' ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்' என்றானாம்.. இவ்வாறு பலர் ஹிட்லரை கண்மூடித்தனமாக நம்பினார்கள். நாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளை' சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும் 'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஷாம்பெயின் பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களை நிற்க வைத்து நெற்றியில் சுட்டால் பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கி சுடும் போட்டி' கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.


இறந்தவர்களின் பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.


'யூதர்கள் மனிதர்கள் அல்ல.. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்! ' என்று அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக் கொண்டு பைகள் செய்வதைப் போன்ற ஒரு செயல் தான் இதுவும்' என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல் படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்கு திரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்து சொல்லப்பட்டது.


ஒருமுறை அனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களை கூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால் சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். காரணம், 'weakness' என்பதே கூடாது என்பது தான் நாஜி தத்துவமாம். இத்தனையும் மீறி பல அதிகாரிகள் குற்ற உணர்வினால் அவதிப்
 பட்டார்கள் என்பதும் உண்மை.


நியாயம் - அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்' தலை எடுக்கிறான்! அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டு இறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின் உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக் கீழே பதினாலு வயதுப் பெண் கிடந்தாள், உயிரோடு.
பல உடல்கள் அவள் மேல் விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். உடனே அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்த அந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால் ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும் ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம் துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள் குழந்தை போல் பாவித்து சிலர் கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.


விஷயத்தை  மற்றவர்கள் விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப் பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத் துடித்தன.  விரல்கள் நடுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில் வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது  என்ன தெரியுமா..
'இந்தத் தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின் கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள் அனைவருக்கும்' என்றானாம்.
ஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல் பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.
 
வரும் பதிவுகளில் உலகப்புளுகன் கோயபல்ஸ் பற்றியும், ஹிட்லரின் கடைசி காலக் காதல் பற்றியும், அவரின் வீழ்ச்சிப் பற்றியும் காணலாம். ( நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.. தொடர்ந்து பதிய முயற்சிக்கிறேன்..)

Saturday, June 12, 2010

செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்   ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.ரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்..
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, வாக்களித்து உதவுங்கள்...

Saturday, May 01, 2010

ஹிட்லர் - பாகம் 3 - மாபெரும் சாதனையாளர்..

            
ஒரு மனிதன் செய்த தவறுகளையே முன்னிலைப் படுத்தி அவனின் சாதனைகளை மறந்திடுவது நமது இயல்பு... இது அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் செய்யும் தவறுதான்.. ஹிட்லர் பெரிய தவறுகளை செய்திருந்த போதிலும் அவர் மிகப் பெரிய சாதனைகளுக்கும் சொந்தக்காரர். அவை முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டது..

                 சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும்.. ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா... "விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!", என்று எச்சரித்தார் ஹிட்லர்.
         
        வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும்..அதே போன்று,ஹிட்லரின் தவறுகளால்,அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது,அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

         1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்'என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட்,"ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை 'ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.

        முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933 -இல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 -இல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது.. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார். ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை.. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். ( திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.)

       ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn ) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்..

        முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.

        "சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும்.ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.

      'தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது' அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.

     ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார். 

          சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான். (அதனால்தான் என்னவோ சர்வதிகாரிகளின் ஆட்சிக்கு ஆதரவு தருவோர்களும் பலர் உண்டு.)

       ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது. 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.

         ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.

         இப்படி பல சாதனைகள் மூலம், அநேகமாகக் கடவுளுக்கு இணையாக ஜெர்மன் மக்களால் போற்றப் படும் நிலையை ஹிட்லர் நெருங்கிய சமயத்தில், அவர் அடியோடு கொலைகாரச் சர்வாதிகாரியாக மாறி, வெறியாட்டம் போட்டு, பிறகு ஒரேயடியாக வீழ்ச்சியின் விளிம்புக்கு போனது உலக வரலாற்றுச் சோகம். அவரின் பிற்பாதி கொடூர சர்வாதிகார ஆட்சியை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

(பின் குறிப்பு : ஹிட்லரின் மிகப் பெரிய தவறுகள் பலருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலானோர் அறிந்திருக்கின்ற காரணத்தால் சுருக்கமாக சொல்லி அடுத்த பதிவுடன் முடிக்க நினைக்கின்றேன். ஆனால் சிறிது விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினால் எனக்கு தெரியப் படுத்துங்கள்..விவரிக்கிறேன்.. உங்கள் ஓட்டுக்கள் பலரை இந்த பதிவு சென்றடைய உதவி புரியும்.. நன்றி..)




    

Monday, April 26, 2010

ஐ.பி.எல் -"சென்னை அணி தோற்றிருக்கலாமே",சென்னைவாசியின் ஆதங்கம்.



        ஒன்றரை மாதங்களாக நடந்து கொண்டிருந்த 20-20 போட்டிகள் ஒரு 
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே 
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த மும்பை அணி இறுதியிலும் 
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின் 
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம் 
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம் 
கற்பனை செய்து வைத்திருந்தேன்..

அனைவருமே போட்டியை பார்த்திருப்பீர்கள். எனவே எப்படி சென்னை வென்றது, எப்படி மும்பை தோற்றது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தால் வலது மேற்புறத்தில் இருக்கும் 'X' பொத்தானை அமுக்கிவிடுவீர்கள் என்று நானறிவேன்...

ஆனால் ஏன் சென்னை தோற்று இருக்க வேண்டும் என்று ஒரு சென்னைவாசியான நான் நினைக்க வேண்டும் என்று நீங்கள் கேக்கலாம்.. சென்னை அணி ஒன்றும் சென்னை வீரர்களின் திறமையை கொண்டோ, தமிழக வீரர்களின் திறமையை கொண்டோ, கோப்பையை வென்றிருக்கவில்லை. தோனி, பௌலிங்கர் போன்றோரையே சார்ந்திருந்தது.. தமிழக தொழிலதிபர் வாங்கியதாலேயே,சென்னையின் அணி ஆகிவிடாது.. எனவே சென்னை அணியின் மீது எனக்கு பெரிதாக ஒட்டுதலே இல்லை.. அதுவும் சென்னை அணி எதிர்த்தது சச்சினை... சச்சின் என்றுமே இந்தியர்களின் பிரதிநிதி.. சென்னை அணியா, இந்திய சாதனை மன்னனா என்று வந்ததால், ஒரு இந்தியனாக சச்சினுக்கே எனது ஆதரவு கிட்டியது... சென்னை அணியின் சரிவை கொண்டாடினேன்.. ( ஆனால் கடைசியில் எனது தம்பியிடமும், தந்தையிடமும் மூக்கு உடைபட்டது வேறு விஷயம்.. பரவாயில்லை.. சச்சினுக்க்காகத்தானே... )

சச்சின் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால் இந்த கோப்பை அவருக்கு மிகப்பெரிய பெருமிதத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனென்றால் அவர் இந்த தடவை,தனது கிரிக்கெட் வாழ்வின் ஒரேயொரு கரும்புள்ளியான 'கேப்டன்'பதவிக்கு லாயக்கில்லாதவர் என்ற கரையை துடைத்து எறியும் வாய்ப்பு பெற்றிருந்தார்..அதுவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியிடம் வெற்றிக் கோப்பையை பறித்து தன்னை சிறந்த அணித்தலைவராகவும் பதிவு செய்திருப்பார்...


தோனிக்கு வாய்த்ததை போன்றதொரு சிறந்த அணி சச்சின் கேப்டன் ஆக இருந்த போது அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் கங்குலி போன்றதொரு சிறந்த கேப்டன் உருவாக்கி கொடுத்த அணியை கொண்டு, டோனி பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகள், சச்சினுக்கு நிச்சயமாக அணித்தலைவராக தான் சோபிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்திய அணியின் வெற்றிகள் சச்சினுக்கு வருத்தம் தருகிறது என்று சொல்லவில்லை... அணித்தலைவராக தோனியின் வெற்றிகள் நிச்சயமாக சச்சினுக்கு வருத்தத்தை தந்திருக்கும்..

ஐ.பி.எல். கோப்பை அந்த வருத்தத்தை நீக்கியிருக்கும்... தோனிக்கு ஐ.பி.எல். லில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் அவர்..ஆனால் சச்சினுக்கு வெற்றி கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் தனது நீண்ட நாள் மனப் புழுக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்.. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தரும் சச்சின் சந்தோஷப்படவும், பெருமிதப்படவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது..

கோப்பையை வெல்ல தகுதியான அணியும் சச்சினின் அணிதான்.. தோனியின் அதிர்ஷ்டகரமான வெற்றியினை இன்னொருமுறை காண்பதற்காக தான், தனது அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றோமா என்று கூட சச்சின் நினைத்திருக்கலாம்.. சச்சின் ஒன்றும் பொறாமை குணம் கொண்டவர் இல்லை.. ஆனால் வெற்றிகளின் மேல் ஆசை இல்லாதவர் இல்லை..  அவ்வாறு ஆசை இல்லாதவராக இருந்தால் இத்தனை சாதனைகளை அவர் புரிந்திருக்கவே முடியாது.. இன்னொரு முறை ஒரு அணித்தலைவராக தனது மிகப் பெரிய வெற்றியை சச்சின் பெறுவதுற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான்.. ஆனால் சந்தேகமே இல்லாத பிரபலமான வாசகம்....
"கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் ஒரேக் கடவுள்" 

Sunday, April 11, 2010

ஹிட்லர் - பாகம் 2 - நாடோடியும் திறமையால் அதிபராகலாம் ..

     (கடந்த பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.. எனவே தாமதமில்லாமல் அதன் தொடர்ச்சியை தருகிறேன்... முடிந்தவரை தமிழில் தரவே முயல்கிறேன். ஆனாலும் சில இடங்களில் தமிழிஷ் எட்டிப் பார்க்கலாம். தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும். திருத்தல்களை தெரிவிக்கலாம். புதியவர்கள் முந்தைய இரு பதிவுகளை படித்தால் தெளிவாக உணரலாம்.)   
      அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார்.. அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.. முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி.. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.. ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான்.. அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது. ( நம் அனைவருக்கும் நமது உறுதியையும் திறமையையும் உணர்ந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது. ஹிட்லரின் உறுதியை அவரே உணர்ந்து கொண்ட தருணம் இதுவாக இருக்கலாம் ).

          ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். " கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன் ! " என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.

        மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான்.. அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. ( இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது ). மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது. 1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.
    
           அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.

( புகைப்படத்தில்  கூட்டத்தில் ஒருவராக ஹிட்லர்)
                1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ( முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. இத்துணைக்கும் அவர் திரைப்பட நடிகரோ, அரசியல் குடும்ப வாரிசோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.) சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான். சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.

அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


     ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி.ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது. அந்த சமயம் பார்லிமெண்டில் தீப்பற்றி கொள்ள கம்யூனிஸ்ட்களே இதற்க்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார். 1934 -ல் ஹிண்டன்பெர்க் இறந்துவிட, ஜனாதிபதி பதவியை கைப்பற்றினார் ஹிட்லர்.


     ஜனநாயகம் முறையில் ஆட்சியை பிடித்த ஹிட்லர், தனது திறமையால் ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்தி, ஜெர்மனியர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டதும், பிறகு கொலைகள் செய்யும் சர்வாதிகாரியாக மாறியதும், அதனால் வீழ்ச்சியடைந்ததும் வரும் பதிவுகளில்...

( புதிதாக பதிவுகளை எழுத தொடங்கிய எனக்கு உங்களின் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி.. நான் உங்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன். )

Saturday, April 10, 2010

ஹிட்லர் - நாயாக நடத்திய தந்தையும், வீணாக கழிந்த இளமையும்..

           உலகின் மிகப்பெரிய கமாண்டர்களில் ஒருவரான ஹிட்லர், சில பெரும் தவறுகளை செய்ததால் வீழ்ச்சியடைந்தார்.. அவரின் இளமைக்காலத்தில் வருங்காலத்தில் தான் ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைவோம் என்று அவருக்கே கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. உயரத்தில் இருந்த போது, மிருகமாக மாறி, வீழ்ச்சி அடைவோம் என்றும் உணர்ந்திருக்க வில்லை..
           ஜெர்மனி நாட்டையே தனது கையசைவில் வைத்திருந்த ஹிட்லர் ஜெர்மனியர் இல்லை.. ஆஸ்திரியாவில் பிறந்து, ஜெர்மனிக்கு குடியேறியவர்.. (மண்ணின் மைந்தன் குரல் எழுப்ப பால் தாக்கரே அங்கே இல்லை போலும்..)
           ஹிட்லரின் பாட்டிக்குத் தன கணவர் யார் என்றே தெரியாது என்றும், அவரை ஏமாற்றியவர் ஒரு யூதர் என்றும், அதனால் தான் பிற்காலத்தில் யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கிளம்பியதாகவும், ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது.. ஹிட்லரின் தந்தை அலோய்ஸ், தந்தை பெயர் தெரியாத காரணத்தாலேயே எப்பொழுதும் சோகமாகவே காணப்படுவாராம்.. 
          அலோய்ஸ் கண்டிப்பான தந்தை.. சுங்க இலாகாவில் சாதாரண அதிகாரி.. அவர்  ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார்.. ( அரசையே நிர்வகிக்க போகிறார் எனத்தெரியாமல்.. ) ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது..


        குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது.. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார்.. ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்.. 'அடால்ப்' என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம்.. அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்..  
       ஆனால் ஹிட்லருக்கு பதினாலு வயதிருக்கும் போதே, அவர் தந்தை இறந்துவிட்டார்.. மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது.. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.. ஆனால் பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது.. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார்.. ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.. அடுத்த வருடமும் முயற்சி செய்தார்.. ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை.. அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது.. ( அமிதாப், இளமைக்காலத்தில் குரல் சரியில்லை என டெல்லி வானொலி நிலையத்தால் நிராகரிக்கப்பட்டது என் நினைவிற்கு இப்போது வருகின்றது..)
       ஹிட்லரின் தாயும் அச்சமயத்தில் இறந்து போனார்.. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது.. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார்.. ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது..
       இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார்.. தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது.. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான்.. ( டீக்கடைகளில் நாளிதழ் படிப்பவர்களிடம் உஷாராக இருக்கவும்.. அவர்கள் வருங்காலச் சர்வாதிகாரிகளாக மாறலாம் ). தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார்.. இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை.. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்...( இளமையில் ஒரு நண்பனை கூட பெற முடியாதவர், பிற்காலத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை தனது மந்திரப்பேச்சால் ஆட்டிப்படைத்தது எத்தகைய சாதனை...)
       பணம் கரைந்தது.. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார்.. வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  அப்போதுதான்.. ஓவியராக முடியவில்லை.. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து.. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது..


        இதுவரை ஹிட்லரின் வாழ்க்கை முழுவதும் தோல்விமயமே.. அடிமைத்தனமான குழந்தை பருவம்.. பள்ளிப்படிப்பையும் அவர் முடிக்கவில்லை.. பிறகு ஓவியராகும் முயற்சியிலும் படுதோல்வி.. வேலை இல்லாமல் வியன்னா நகரில் நடோடித்தனமான அலைச்சல்.. இளம்வயதிலேயே பெற்றோருடைய இழப்பு.. ஒரு நண்பர் கூட கிடையாது.. காதல் என்பது இல்லவே இல்லை.. ராணுவத்திலும் பெரிதாக வேலை உயர்வு கிடைக்கவில்லை..


        ஹிட்லர் பிறந்தது 20, ஏப்ரல் 1889 -இல். இறந்தது 30, 1945 -இல். இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில், முதல் முப்பது௦ ஆண்டுகள் ஹிட்லர் என்று ஒரு மனிதர் இருந்தார் என்பது அவருடைய சொந்த ஊரில் கூட யாருக்கும் தெரியாது.. ஆனால் மீதி 26 ஆண்டுகளில் அவரை பற்றி தெரியாதவர்களே உலகில் கிடையாது..
        ஹிட்லரின் சாதனைகளையும் வேதனைகளையும் வரும் பதிவுகளில் காணலாம்..
(பின் குறிப்பு : நான் ஹிட்லரை பற்றி முழுமையாக தெரிந்தவன் இல்லை.. பிரபல விமர்சகர் மதனின் புத்தகத்தில் நான் படித்தவற்றை பகிர்கிறேன்.. மதன் தவறாக எண்ணமாட்டார் என்று நம்புகிறேன்.. தவறு இருந்தால் திருத்தவும்...)

Friday, April 09, 2010

ஹிட்லர் - ஒரு சாது, மேதையாகி, மிருகமாய் இறந்த உண்மை..

                 மிகப் பெரிய பொருளாதார நிபுணராக உலக மக்களால் நினைவு கூறப்பட்டிருக்க வேண்டியவர் ஹிட்லர்.. உள்ளிருந்த மிருகம் முழித்து கொண்டதால் கொடூர மிருகமாக அறியப்படுகிறார்.. நிச்சயமாக நான் ஹிட்லரை புகழ்பவனோ, இகழ்பவனோ கிடையாது.. படித்ததை பகிர்ந்திட நினைக்கிறேன்.. 
               சாதுவாக வளர்ந்து, வேலை இல்லாமல் திரிந்து, உருப்படாமல் போக இருந்தவன், முதல் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்து, சிறிய கட்சியில் சேர்ந்து, திறமையால் ஆட்சியை பிடித்து, ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்திய மேதையாக திகழ்ந்ததும், உள்ளிருந்த மிருகம் விழித்து கொண்ட காரணத்தால் கொடூர மனித வேட்டையாடும் ஓநாயாக மாறி, போரில் தோற்று , கடைசியில் மனநிலை பாதிக்க பட்டவனாக மற்றவர்களால் பரிதாபமாக பார்க்கப்பட்டு, மனம் திருந்தாமலேயே காதலியுடன் உயிரை மாய்த்துக் கொண்டது, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.. 
          சமீபத்தில் ஹிட்லரை பற்றிய சில துணுக்குகளை மதனின்(கார்டூனிஸ்ட்) 'மனிதனுக்குள்ளே மிருகம்' என்ற நூலில் படித்தேன்.. மேலே கூறியது நான் படித்ததின் சுருக்கம்.. விரிவாக பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை.. தொடர்ந்திடலாமா என உங்களின் கருத்தை கேட்கிறேன்...

Tuesday, April 06, 2010

அங்காடித்தெரு - இது பாராட்டும் விமர்சனம் அல்ல..

அங்காடித் தெரு படம் பார்த்தேன்.. வித்தியாசமாகவே இருந்தது.. நல்ல முயற்சி.. சில படங்கள் என்னை அதிகமாகவே பாதித்துள்ளது.. அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக என்னை பாதிக்கவில்லை என்றே படம் பார்த்து வெளியே வந்ததும் தோன்றியது. அதன் பிறகு பெரிதாக அன்றிரவு வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை... ஆனால் அன்றிரவு சில எண்ணங்கள் மனதினில்... வேலைக்காக இன்னொரு ஆம்பிளையின் அத்துமீறல்களை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் அத்தகைய துணிக்கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனரா.. அந்த அளவுக்கு மானம் விட்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளதா.. இல்லையெனில் மிகை படுத்த பட்டிருக்கிறதா.. அவ்வாறு அது உண்மையெனில் லாட்ஜ்களில் ரைட் போவதை விட மிக முக்கியமானது அத்தகைய கடைகளில் நடவடிக்கை எடுப்பது.. ஆனால் எல்லா துறைகளிலும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சில அத்துமீறல்கள், இந்த படத்தில் மிகை படுத்தி காட்ட பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.. அவ்வாறு எனது எண்ணம் உண்மையெனில் வசந்தபாலன் மிகவும் கண்டனத்திற்குரியவர்.. ஏன் என்றால்.. இப்படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் அத்தகைய பணிபுரியும் சிறு வயது பெண்களின் பிரதிநிதியாக தத்ருபமாக படைக்கபட்டிருக்கிறது.. தேர்ந்த நடிப்பு.. வேலைக்காக சூப்பர்வைசர் கசக்கிய போது பேசாமல் இருந்தேன் என அவள் சொல்லும் போது பரிதாபம் பொங்குகிறது.. ஆனால் உண்மையாகவே குடும்பத்தை விட்டு இங்கு பணிபுரியும் மற்ற பகுதிகளை சேர்ந்த பெண்களின் வீட்டில் இந்த படம் அவர்களுக்கு எந்த மாதிரியான பேரை பெற்று தரும்?? அந்த பெண்களை சார்ந்தவர்களிடம் அவர்களை பற்றிய எத்தகை எண்ணத்தை ஏற்படுத்தும்?? அந்த பெண்களின் ஊர்களில்... அவளுக்கு திருமணம் பார்க்க ஏற்பாடு செய்திருந்த இடங்களில்... நிச்சயம் அவள் மேல் பரிதாபத்தை மட்டும் அல்ல.. எதிர்மறையான எண்ணங்களை கூட ஏற்படுத்தும்... இது பிதற்றலாக கூட இருக்கலாம்.. ஆனால் அத்தகைய பெண்கள் வரும் பகுதிகளை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையானவை தான் என்று எண்ணுபவர்கள் ஆகத்தான் இருக்கின்றனர்... இதை நாம் மறுக்க முடியாது.. அங்காடித்தெரு போன்ற படங்கள் அத்தகைய பெண்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் உயர்த்த போவதில்லை.. ஆனால் ஒரே ஒரு பெண்ணின் வீட்டில் அவளை பற்றிய தவறான எண்ணத்தை அந்த படம் ஏற்படுத்தினாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்...